Wednesday, February 10, 2010

சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்

சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகளும், வடை, போண்டா போன்ற பலகார வகைகளும் சிற்றுண்டியாக உள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக இந்த வகை உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன.

பெரும்பாலும் சிற்றுண்டி வகை உணவுகள் தானியங்களைக் கொண்டு அல்லது அரைத்த தானிய மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தானியங்களில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) இருக்கின்றது. புரதம் (Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவையும் நிறைந்து உள்ளது. முதலில், சப்பாத்தி வகைகள் எடுத்துக் கொள்வோம்.

தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்
**************************************

புல்கா/சுக்கா சப்பாத்தி [Pulkas]





தேவையான பொருட்கள்
  • கோதுமை மாவு - 2 கப் குவித்து
  • தண்ணீர் - மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு
  • உப்பு - விருப்பமானால்
  • எண்ணை - 2 டீஸ்பூன்
செய்முறை
1. கோதுமை மாவுடன் உப்பு [தேவையானால்], மற்றும் நீர் விட்டு சற்று இளக்கமாக  பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
3. சுமார் 3 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
4. மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.
5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.
6. சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
7. சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி ஆகும்.
8. சப்பத்தியை ஒரு முறை கையினால் லேசாகக் கசக்கி முக்கோணமாக மடித்து மெல்லிய துணி விரிக்கப் பட்டுள்ள பெட்டியில் மூடி வைக்கவும்.
9. விருப்பமானால் மடிப்பதற்கு முன் ஒரு பக்கம் சிறிது நெய் தடவலாம்.

[கலோரி அளவு: 1 புல்கா- 73 கலோரி

கிடைக்கும் அளவு: 14 சப்பாத்திகள்]


**************************************************

காலிப்ளவர் சப்பாத்தி[Cauliflower Chapati]

உள்ளே நிறப்பும் மசாலாவுக்குத் தேவையான பொருட்கள்:

*காலிப்ளவர் - 1 சிறியது
*வெங்காயம் - 1
*பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - 2 லேபிள் ஸ்பூன்
*பொடி உப்பு - 1 டீஸ்பூன்
*கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன்
*தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*சர்க்கரை - 1 டீஸ்பூன்
*வெண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்
*மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

1. காலிப்ளவரைக் கழுவி 1 மணி நேரம் உப்பு சேர்த்த தண்ணீரில் ஊற வக்கவும்.
2. பிறகு நன்றாகக் கழுவி முழு பூவை கையில் வைத்துக் கொண்டு ஸ்டீல் துருவி உபயோகப்படுத்தி பொடியாக துறுவவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
4. வாணலியில் வெண்ணையைச் சூடாக்கி சீரகம் போட்டு தாளிக்கவும்.
5. துருவிய காளிப்ளவர் சேர்த்து நல்ல அனலில் பச்சை வாசனைப் போகும்வரை கிளரிவிட்டு வதக்கவும்.

"ஸ்டப் சப்பாத்தி" செய்யும் முறை:


1. ஓர் உருண்டையை எடுத்து 3 அங்க்குல அகலமுள்ள சப்பாத்தியாக இடவும். மற்றோன்று அதே அளவில் செய்யவும்.
2. ஒரு சப்பாத்தியின் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் மசாலாவை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி இருக்கும்படி பரப்பவும்.
3. மற்றோரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை ஒட்டி விடவும்.
4. மாவில் புரட்டி எடுத்து பெரிய கனமான சப்பாத்தியாக கவனமாக இடவும்.
5. சூடான தோசைக்கல்லில் இவ்வொரு பக்கத்திற்கும் 1/4 டீஸ்பூன் எண்ணைய் விட்டுச் சுடவும்.
6. "ஸ்டப் காலிப்ளவர் சப்பாத்தி" சூடாகப் பரிமாறவும்.

[மொத்த கலோரி மதிப்பு: 355 கலோரிகள்]

****************************************************************

வெந்தய ரொட்டி [Methi Roti]

தேவையான பொருட்கள்:

*கோதுமை மாவு - 2 கப்
*வெந்தய கீரை - 2 கட்டு
[இலைகளை மைடும் அரியவும்]
*பொடி உப்பு - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்
[மாவுக்கு]
*தனியத்தூள் - 1 டீஸ்பூன்
*மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
*சீரகம் [அ] ஓமம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தேவையான் தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும்.
3. சுமாரான கனமுள்ள சப்பாத்திகள் தயாரிக்கவும்.
4, சூடான தோசைக்கல்லின் மேலே சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் 1/2 டீஸ்பூன் எண்ணைய் விட்டுச் சுடவும்.

குறிப்பு:

வெந்தயக் கீரையை அரிந்தவுடன் கசப்பேறுமுன் உடனே மாவுடன் கலக்கவும். வெந்தய கீரை பரோட்டா தயாரிக்க மாவைக் கலக்கும் போது எண்ணைய் அதிகமாக விடவும். ரொட்டியை விட பரோட்டாவை கனமாக இடவும்.


[கிடைக்கும் அளவு: 12 ரொட்டிகள்]
 கலோரி அளவு: 1 ரொட்டி - 112 கலோரி]


*****************************************************
 
நான் [ Naan]

தேவையான பொருட்கள்:

*மைதா - 500 கிராம்
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
*உலர்ந்த ஈஸ்ட் - 3/4 டீஸ்பூன்
*சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
*பொடி உப்பு - 1 1/4 டீஸ்பூன்
*பேக்கிங் பௌடர் - 3/4 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3/4 டீஸ்பூன்
*உருகிய நெய் [அ] வெண்ணைய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

1. மைதாவோடு உப்பு, பேக்கிங் பௌடர், சோடா இவற்றை சேர்த்து மும்முறை சலிக்கவும்.
2. ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
3. சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்திலிட்டு, நடுவில் ஒரு குழி செய்யவும்.
4. ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை அந்த குழியில் ஊற்றவும்.
5. ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும்.
6. பிசையும் பொழுது தேவைப்பட்டால் வெந்நீர் தெளித்து தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
7. ஒரு அகலமான் பேஸினில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேலே ஒரு தட்டு வைத்து மூடவும். மாவு பொங்கி வர இடைவேளி இருக்குமாறு வைக்கவும். 5 [அ] 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்யவும்.
8. உருட்டுக் கட்டையால் 1/4 அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும்.
9. ஒரு நுணியை கையால் இழுத்து பூசினி விதை போன்ற வடிவமாக்கவும்.
10. அதன் மேல் பக்கம் சிறிது தண்ணீர் தடவி, சூடான பாலின் மேல் [ Flat pan with handle] தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும்.
11. மிதமான அளவில் வைத்து மேலே மூடியால் மூடவும்.
12. மூடியைத் திறந்தால், நான் [ Naan] உப்பி வந்திருக்கும். பானின் பிடியைப் பிடித்து, தலைகீழாகத் திருப்பி நேரிடை அனலில் காட்டி மற்றொரு பக்கத்தை பொன்னிறமாக சுடவும்.
13. சிறிது வெண்ணைய் தடவி சூடாகப் பரிமாறவும்.


[கலோரி அளவு: 1 நான் [ Naan] - 136 கலோரி
கிடக்கும் அளவு: 15 சுமாரான அளவுள்ள நான் [Naan] தயாரிக்கலாம்]

*************************************************
 
பரோட்டா[Parotta]

தேவையான பொருட்கள்:

*மைதா - 4 கப் [குவித்து]
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*பொடி உப்பு - 1 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 1/2 கப்

செய்முறை:

1. மைதாவோடு, பேக்கிங் பௌடர், உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
2. மாவோடு,  2 முதல் 3 டீஸ்பூன் எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
4. ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.
5. பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
6. கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும்.
7. ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும்.
8. எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.
9. மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல்[pleats] மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.
10. இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.
11. ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.
12. எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.
13. சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான பரோட்டாவாக கையினால் தட்டவும்.
14. சுமாரான அளவில்தோசைக்கல் வைத்து பரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
15. அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு துணியால் பக்கங்களை அழுத்தி, பின், தளர்த்தி சூடாகப் பரிமாறவும்.


[கிடைக்கும் அளவு:- 20 பரோட்டாக்கள்
கலோரி அளவு: 1 பரோட்டா = 133 கலோரி]


*********************************************

வெந்தயக் கீரை இஞ்சி ரொட்டி[ Methi Ginger Roti]

தேவையான பொருட்கள்:

*கோதுமை மாவு - 1 1/2 கப்
*அரிசி மாவு - 3/4 கப்
*சிரோட்டி ரவை - 1/2 கப்
*பொட்டுக் கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
*பொடியாக அரிந்த வெங்காயம் - 1 1/2 கப்
*பொடியாக நறுக்கிய வெந்திய கீரை - 1/2 கப்
*பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
*இஞ்சி - 1/4 அங்குலத் துண்டு

செய்முறை


1. உலர்ந்த பொருட்களையெல்லாம் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் விட்டு கலக்கவும்.
2. சிறிது தண்ணீர் விட்டு இஞ்சியை அரைத்து வ்டிகட்டி விடவும்.
3. இந்த இஞ்சி சாற்றையும், கீரை, மிளகாய் விழுது மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. திட்டமான தண்ணீர் விட்டு கெட்டியான மாவாகப் பிசையவும்.
5. சிறிய உருண்டைகளாகச் செய்து ஓர் ஈரத்துணியைப் பரப்பி அதன் மேலே உருண்டையை ரொட்டிகளாகத் தட்டவும்.
6. தோசைக் கல்லை காய வைத்து தேவையான எண்ணைய் விட்டு இருபுறமும் சிவக்க சுடவும்.
7. சூடாகப் பரிமாறவும்.

[கிடைக்கும் அளவு: 18 ரொட்டிகள்

கலோரி அளவு: 1 ரொட்டி = 94 கலோரி
[எண்ணைய் இல்லாமல்]

******************************************************

காக்ரா [Khakra ]

தேவையான பொருட்கள்


*கோதுமை மாவு - 2 கப்
*பொடி உப்பு - 3/4 டீஸ்பூன்
*தண்ணீர் - மாவை பிசைவதற்கு
தேவையான அளவு


செய்முறை:



1. தேவையான அளவு தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசையவும்.
2. பல நிமிடங்கள் நன்றாகப் பிசையவும்.
3. 16 உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றையும் மிக மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
4. ஒரு மெல்லிய தோசைக்கல் வைத்து சப்பாத்தியின் இருபுறமும் சிறிது நெய் தடவி, சிறிது பொன்னிறமாக சுடவும்.
5. எல்லா சப்பத்திகளையும் அவ்வாறே சுட்டு வைக்கவும்.
6. ஒரு தடிப்பான தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும்.
7. கல் சூடானதும், தயாரித்த சப்பாத்தியை மேலேயிட்டு மெல்லிய துணியை உருட்டி ஒரே சீராக சப்பாத்தியின் மேல் அழுத்தவும். அதே நேரத்தில், சப்பாத்தி பழுப்பு நிறமாகும் வரை சுற்றி சுற்றி உருட்டவும்.
8. திருப்பிப் போட்டு சப்பாத்தி முறுகலாகும் வரை அதே போல் சுடவும்.


மாற்று செய்முறை:



மசாலா காக்ரா செய்ய மாவுடன் மஞ்சள் தூள், ஓமம், மிளகாய் தூள் சேர்கவும்.


குறிப்பு:


இவ்வகை சப்பாத்திகள் முறுக்கு போல முறுகலாக இருக்கும். ஒரு மாதம் வரை கெடாது. சப்பாத்தியை சுடும் போது பல தடவை திருப்பிப் போடக் கூடாது. ஒரே தடவை தான் திருப்ப வேண்டும். இல்லாவிடில்,  சப்பாத்தி உடைந்து விடும்.


[கிடைக்கும் அளவு - 16 காக்ரா

கலோரி அளவு: 1 காக்ரா = 78 கலோரி -
நெய்யும் சேர்த்து]

************************************************************

பட்டூரா [Bhatura]

தேவையான பொருட்கள்

*மைதா - 2 கப் [குவித்து]
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*பால் - 1/4 கப்
*எண்ணைய் - 1 1/2 டீஸ்பூன்[மாவுக்கு]
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*உப்பு - 3/4 டீஸ்பூன்

செய்முறை

1. மாவு. உப்பு, சோடா. எண்ணைய் இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தயிர், பால் சேர்த்து நன்றாகப் பிசையவும். [தேவையானால் பிசையும் போது இன்னும் பால் சேர்த்துக் கொள்ளவும்]
3. மூன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
4. மைதா மாவில் புரட்டி வழக்கமான பூரியை விட சற்று கனமாக பெரிய சப்பாத்தி போல் இடவும்.
5. பெரிய வாணலியில் எண்ணைய் காயவைத்து ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
6. கொண்டைக் கடலை மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.


[கிடைக்கும் அளவு: 8 பட்டூராக்கள்

கலோரி மதிப்பு: 1 படூரா = 185 கலோரி]

**********************************************************

பூரி [Plain Puri]



பூரி
தேவையான பொருட்கள்

*கோதுமை மாவு - 2 கப் [குவித்து]
*உப்பு - 1/4 டீஸ்பூன்
*சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
*நெய் [அ] வனஸ்பதி] - 1 டீஸ்பூன்
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
*மாவைப் பிசைவதற்குத் தேவையான தண்ணீர் [அ] பால்
*எண்ணைய் - பூரி பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

1
. மாவு, உப்பு, பேக்கிங் பௌடர் இவற்றை சலிக்கவும்.
2. சர்க்கரை, நெய், மாவு இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
3. கொஞ்சம் கொஞ்சமாகப் பால் [அ] தண்ணீர் விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
4. 1 [அ] 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
5. சிறு உருண்டைகளாக செய்து பூரி இடவும்.
6. வாணலியில் எண்ணைய் காய வைத்து ஒவ்வொன்றாகப் பொரிக்கவும்.

*குறிப்பு:

சிறிதளவு சர்க்கரை சேர்ப்பதால், பூரி நன்றாகப் பொங்கி வரும்.

*மாற்று பூரிகள் செய்முறை
1. கேரட் பூரி: காரட்டைத் துருவி சிறிது நேரம் ஆவியில் வேக வைக்கவும். விழுதாக அரைத்து மாவுடன் கலக்கவும்.
2. மிருதுவான பூரி தயாரிக்க கோதுமை மாவோடு, அரை கப் மைதா சேர்க்கவும்.
3. மசாலா பூரி: புளிப்புத் தயிர், சீரகம், காய்ந்த மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அரிந்த மல்லித் தழை, இவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கவும்.
4. தக்காளி பூரி: வடிகட்டிய தக்காளி ஜூஸ், சீரகம், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இவற்றை மைதாமாவு அல்லது கோதுமை மாவுடன் சேர்த்து மாவு பிசையவும்.
5. காரப் பூரி: மூன்று கப் கோதுமை மாவோடு, 2 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் ரவை, உப்பு, மிளகாய்த் தூள், சிறிது ஓமம், நெய் இவற்றை சேர்த்து அளவான தண்ணீர் விட்டு, கெட்டியாக மாவு பிசைந்து, பூரி தயாரிக்கவும்.

 [கிடைக்கும் அளவு: 18 பூரிகள்
கலோரி அளவு: 1 பூரி = 80 கலோரி]

No comments:

Related Posts with Thumbnails