Saturday, March 31, 2012

பொடி வகைகள்

இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடியும் பருப்பு பொடியும் பிரசித்தம்.  முதலில் தேங்காய் பொடியை பார்க்கலாம்.

பொடி வகைகள் 


1.  தேங்காய் பொடி


தேவையான பொருட்கள்:

*தேங்காய் துருவல் - 1 கப்
*உழுத்தம் பருப்பு - 1 Tea Spoon
*கடலை பருப்பு - 1 Tea Spoon
*குண்டு மிளகாய் வற்றல் - 10
*பெருங்காயம் - சிறிது
*எண்ணை - 1/2 Tea Spoon  
*புளி - கோலிகுண்டு அளவு

செய்முறை:

1.  தேங்காய் துறுவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலியில் வறுக்கவும்.  கருகாமல் வறுக்கவும்.
2.  புளியை சின்ன சின்ன துண்டுகளாக பியித்து நன்றாக வறுக்கவும். கரகர்ப்பாக வறுக்கவும்.
3.  பிறகு எண்ணை விட்டு மற்ற சாமாங்களை வறுக்கவும்.
4.  ஆறினதும், மிக்சி யில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
5.  பாட்டிலில் போட்டு வைக்கவும்.
6.  தேவையான போது, சூடு சாதத்தில் நேய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து சாப்பிடவும்.
7.  தொட்டுக்கொள்ள அப்பளம் / சாம்பார் / அல்லது கெட்டித் தயிர் சுவையாக இருக்கும்.



2. பருப்பு பொடி


தேவையான பொருட்கள்:  


*துவரம்பருப்பு - ஒரு கப்
*கடலைப் பருப்பு - கால் கப்
*மிளகாய் வற்றல் - 2
*மிளகு - 2 தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.  

2.  துவரம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் எண்ணெயில்லாமல் சிவக்க வறுக்கவும். பாதி வறுக்கும்போதே மிளகு, மிளகாய் வற்றலையும் சேர்த்துக் கொள்ளவும்.

3.  இறக்கி ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும். ரொம்ப நைஸாக இருக்கக் கூடாது.

4.  சாதத்தில் நல்லெண்ணெயோ, நெய்யோ சேர்த்து இந்த பருப்புப் பொடி போட்டு கலந்து மோர்க் குழம்பு, அப்பளத்துடன் சாப்பிடவும்.




3.  இட்லி பொடி


தேவையான பொருட்கள்


*உளுத்தம் பருப்பு - 100 கிராம்
*கடலை பருப்பு - 100 கிராம்
*காய்ந்த மிளகாய் - 50 கிராம்
*வெள்ளை எள் - 50 கிராம்
*பெருங்காயம் - சிறிதளவு
*உப்பு -தேவையான அளவு


செய்முறை


1. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


2. இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும்.


3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.


குறிப்பு


தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த பூண்டை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.




4.  சாம்பார் பொடி


தேவையான பொருட்கள்


*சிகப்பு குண்டு மிளகாய் - 50 கிராம்
*மல்லி [தனியா] - 100 கிராம்
*கடலைப் பருப்பு - 50 கிராம்
*துவரம் பருப்பு - 50 கிராம்
*மிளகு - 2 மேஜை கரண்டி
*காய்ந்த மஞ்சள் கொம்பு - 1


செய்முறை


1. சூரிய ஒளியில் அனைத்து பொருட்களையும் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.


2. ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ பொடியாக்கிக் கொள்ளவும்.


3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.


குறிப்பு


தேவைப்பட்டவர்கள் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து பொடித்துக் கொள்ள


5.  பருப்பு ரசப் பொடி

தேவையான பொருட்கள்

*துவரம் பருப்பு - 100 கிராம்
*சிகப்பு மிளகாய் - 25 கிராம்
*மல்லி (தனியா) - 100 கிராம்
*சீரகம் - 100 கிராம்
*மிளகு - 1 மேஜைக் கரண்டி
*கடுகு - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - 2 தேக்கரண்டி
*உருவிய கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

1. அனைத்து பொருட்களையும் சூரிய ஒளியில் காய வைத்து தனித்தனியே அல்லது ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும்

2. பின்னர் காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.

குறிப்பு

பொடிக்கும் போது கரகரப்பாக பொடிக்கவும்.


6.  பருப்பு சாத பொடி


தேவையான பொருட்கள்


*பொட்டுக் கடலை - 150 கிராம்
*சிகப்பு மிளகாய் - 10
*பூண்டு - 1
*கொப்பரை தேங்காய் - 1 மேஜைக் கரண்டி
*நெய் - 2 தேக்கரண்டி
*கல் உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

செய்முறை

1. வாணலியில் நெய் விட்டு சூடாக்கி பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் ஆகியவறை ஒரு சில நிமிடங்கள் வறுத்து ஆற வைக்கவும்.

2. இதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு பொடிக்கவும். சல்லடை கொண்டு சலித்து கப்பியை மீண்டும் பொடிக்கவும்.

3. பின்னர் கடைசியாக கிடைக்கும் கப்பியுடன், கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து மிக்சியில் குறைந்த வேகத்தில் பொடிக்கவும்.

4. அனைத்தையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.

குறிப்பு

பருப்பு சாத பொடியை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.

7.  அங்காயப் பொடி

அங்காயப்பொடி நம் உடலில் வாதம் மற்றும் பித்தத்தின் அளவை சரி செய்ய கூடியது. அஜீரண கோளாறு, சோர்வு ஆகியவற்றிற்கு சிறந்தது. பாலூட்டுபவர்கள் தினமும் சேர்த்து கொண்டால் இருவருக்கும் நல்லது. பயண நேரத்தில் அவசியம் எடுத்து செல்ல வேண்டிய பொடி இது.

*சிகப்பு மிளகாய் - 12
*தனியா - அரை கப்
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - 2 தேக்கரண்டி
*சுக்கு - 2 துண்டு
*பெருங்காயம் - 3 தேக்கரண்டி
*ஓமம் - 2 தேக்கரண்டி
*அரிசி திப்பிலி - ஒரு தேக்கரண்டி
*கண்டதிப்பிலி - ஒரு தேக்கரண்டி
*சுண்டை வற்றல் - 25
*மணத்தக்காளி வற்றல் - 25
*கறிவேப்பிலை - கால் கப்
*உளுந்து - 2 தேக்கரண்டி
*கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
*துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*எள் - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*இதனுடன் வேப்பம் பூ - கால் கப், சதகுப்பை - 2 தேக்கரண்டி சேர்த்து திரிக்க வேண்டும். 

1.  மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.

2.  முதலில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பெருங்காயம், உப்பு தவிர்த்து சிறு தீயில் வைத்து புகை வராமல் வறுக்கவும்.

3.  கடைசியாக வற்றல், திப்பிலி வகை சேர்த்து வறுக்கவும்.

4.  எல்லாவற்றையும் பரத்தி நன்கு ஆற விடவும்.

5.  நன்கு பொடியாக திரித்து பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

6.  அங்காய பொடி தயார்.

Tuesday, December 6, 2011

கார்த்திகை பண்டிகை இனிப்புகள்

இந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

கார்த்திகை பண்டிகை
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும். 


பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.  பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைப்பது வழக்கம்.

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.


பண்டிகை என்றால் இனிப்புகள் கைட்டாயம் இருக்கும்.... இதோ கார்த்திகை சிறப்பு சமையற்குறிப்புகள் உங்களுக்காக:

கார்த்திகை பொரி


கார்த்திகை பொரி

தேவையானப்பொருட்கள்:

அவல் பொரி - 8 கப்
வெல்லம் பொடிசெய்தது - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும். 

சுத்தம் செய்த பொரியை நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.

உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.

உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடலாம்.  கார்த்திகைப் பொரி தயார்.

இதேபோல், நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியையும் செய்யவும்.  நெல் பொரி, அவல் பொரி இரண்டும் கார்த்திகையின் பொழுது, கடைகளில் கிடைக்கும். இதனை சுத்தப்படுத்தி செய்யவும்.


2.  கார்த்திகை அப்பம்




                    கார்த்திகை அப்பம்
தேவையானப்பொருட்கள்:


அரிசிமாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:


1.  1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.


2.  வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.


3.  அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.


4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.


குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.


மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம். 


சுவைமிக்க கார்த்திகை அப்பம் தயார்.


கார்த்திகை நல்வாழ்த்துக்கள்!

Monday, September 26, 2011

நவராத்திரி பண்டிகை

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.


திருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமின்றி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் புரட்டாசித் திருவிழா, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் அமர்க்களப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருவதே கொள்ளை அழகுதான். புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.



நவராத்திரி விழா : புரட்டாசிக்கு மேலும் மகிமை சேர்ப்பது, நவராத்திரி விரதம். புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.



விக்ரக ரூபமாக எல்லோருக்கும் அருள் புரிய நாராயணன் திருமலையில் கோவில் கொண்டான். ஆதிசேஷனை மலையாக வளரும்படி செய்து, அதில் சேஷகிரி வாசனாக ஸ்ரீனிவாசனாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறான். நின்ற கோலம் ஏன் என்றால், அடி முதல் முடி வரை நாம் தரிசித்து மகிழத்தான் நம் பாவம் போக்கும் தரிசனம் அது. அப்படிப்பட்ட திருவேங்கடவன் பூமிக்கு வந்து உதித்த மாதம் புரட்டாசி.

நவராத்திரி பண்டிகை

நவராத்திரி செப்டம்பர் மாதம் 28 ம் தேதி தொடங்குகிறது.

அக்டோபர் 5ம் தேதி சரஸ்வதி பூஜையும் [ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்], 6ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது.
இந்த பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது சுண்டல்தான். 

தினம் ஒரு சுண்டல் செய்து, அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.

சுண்டல் குறிப்பு:

தேவையானப்பொருட்கள்:

  • *பச்சை அல்லது வெள்ளை பட்டாணி - ஒரு கப்
  • *இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - குறிப்பில் உள்ளவாறு
  • *கடுகு - ஒரு தேக்கரண்டி
  • *கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • *பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
  • *உப்பு - தேவைக்கேற்ப
  • *மாங்காய் (பொடியாக நறுக்கினது) - 2 மேசைக்கரண்டி
செய்முறை:

  • பச்சை பட்டாணியை குறிப்பில் உள்ள முறையில் ஊற வைத்து எடுத்து, ப்ரஷர் பானில் ஒரு விசில் வரை வேக வைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பயறில் இஞ்சி பச்சை மிளகாய் விழுதைச் சிறிது நேரம் பிசறி வைக்கவும்.
  • வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயப் பொடி போட்டுத் தாளித்து, பிசறி வைத்திருக்கும் பயறையும், உப்பையும் போட்டு கிளறி இறக்கவும்.
  • இறக்கினவுடன் மாங்காயையும், கொத்தமல்லியையும் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும். வேகவைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு ப்ரஷர் குக்கரில் வேகவிடவும். ஒரு அங்குல இஞ்சித்துண்டு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பயற்றில் சிறிது நேரம் பிசறி வைத்து விட்டுத் தாளித்துக் கிளறினால், வாயு உபத்திரவம் இருக்காது. ருசியாகவும் இருக்கும்.

Tuesday, August 30, 2011

வினாயகச் சதுர்த்தி பண்டிகை

வினாயகச்சதுர்த்தி, இந்த ஆண்டு [2011] - செப்டம்பர் 1ஆம்  நாள் வருகிறது. 
நம் தமிழ் நாட்டில், சிறப்பு உணவில்லாமல் பண்டிகை உண்டா?  அதுவும் கொழுக்கட்டை இல்லாமல் வினாயகச் சதுர்த்தி கொண்டாட முடியுமா?  


வினாயகச் சதுர்த்தி பண்டிகை

எந்த ஒரு நல்ல நிகழ்வுகளுக்கும் நாம் எப்போதும் பிள்ளையார் சுழி போடாமல் 
ஆரம்பிப்பதில்லை, ஏனென்றால் வினாயகன் விக்னேஸ்வரன் ஆமாம் எந்த ஒரு விக்னமும் இல்லாமல் சுபிக்ஷ்மாக நாம் நடத்தும் அனைத்தும் நடக்கவேண்டும் என்று முழுமுதற்கடவுளான வினாயகரை வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் ஜெயமாகும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வினாயகருக்கு மிகவும் பிடித்த அருகம் புல்லால் அர்ச்சனை செய்து 
அவருக்குப் பிடித்த கொழுக்கட்டை போன்ற பல சுவையான உணவுப் பண்டங்களைத் 
தயாரித்து அவருக்கு படைத்துவிட்டு மிக இனிமையாக நம் குடும்பத்தோடு நிறைந்த மனதோடு வினாயக சதுர்த்தியைக் கொண்டாடுவோம் 

நம் தமிழ் நாட்டில், சிறப்பு உணவில்லாமல் பண்டிகை உண்டா?  அதுவும் கொழுக்கட்டை இல்லாமல் வினாயகச் சதுர்த்தி கொண்டாட முடியுமா?  


இவ்வருடமும், சுவைமிக்க கொழுக்கட்டை செய்து, இறைவனை வழிபட்டு, மகிழ்ச்சியுடன் அனைவரோடும் சேர்ந்து இப்.பண்டிகையைக் கொண்டாடுங்கள்.  


இதோ, கொழுக்கட்டை செய்யும் முறை:  


பூரண கொழுக்கட்டை / மோதகம்


தேவையான பொருட்கள்:

*அரிசிமாவு - 2 கப்
*வெல்லம் பொடி செய்தது - 2 கப்
*தேங்காய்த்துருவல் - 2 கப்
*ஏலக்காய் - 4 பொடி செய்தது
*எண்ணை - 2 முதல் 3 டீஸ்பூன்
*உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பூரணம்:

ஒரு பாத்திரத்தில், வெல்லத்தைப்போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன், வேறொரு பாத்திரத்தில் அதை வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, கெட்டியாகும் வரை, கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் அதில், ஏலப்பொடியைத்தூவிக் கிளறி, இறக்கி வைக்கவும்.

மேல் மாவு:

*ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

*4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கொதிக்க விடவும்.

*கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக (சப்பாத்தி மாவு போல்) பிசைந்துக் கொள்ளவும்.

*விரல்களில் எண்ணைத் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இது மோதகம் எனப்படும். கொழுக்கட்டை என்றால், பூரணத்தை நடுவில் வைத்து, இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்தி விடவும். எல்லா மாவையும், மோதகமாகவோ, கொழுக்கட்டையாகவோ செய்து, இட்லி தட்டில் சிறிது எண்ணையைத் தடவி, அதில் வைத்து 5முதல் 8 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.



குறிப்பு:

கைகளால் மாவை கிண்ணம் போல் செய்யக் கடினமாயிருந்தால், கொழுக்கட்டை அச்சை உபயோகப் படுத்தலாம். கடைகளில் கிடைக்கும்

தேங்காய் பூரணத்துடன், பருப்பு பூரணம், எள்ளு பூரணம் ஆகியவற்றையும் செய்யலாம்.

பருப்பு பூரணம்:

தேவையா
ன பொருட்கள்:


*கடலைப்பருப்பு - 1 கப்
*வெல்லம் பொடி செய்தது - 1 கப்
*தேங்காய்த்துருவல் - 3/4 கப்
*ஏலக்காய் - 2

செய்முறை:

கடலைப்பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, ஊறிய நீரை வடித்து விட்டு, நல்லத் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். பருப்பு மிருதுவாக வெந்தவுடன் (குழையக் கூடாது), இறக்கி நீரை வடித்து விட்டு ஆற விடவும்.

பருப்பு சற்று ஆறியவுடன், அத்துடன், வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுத்து, அதை ஒரு அடி கனமானப் பாத்திரத்தில் போட்டு அடுப்பிலேற்றவும். நிதானமாத் தீயில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பூரணம் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும்.

எள்ளு பூரணம்:

தேவையான பொருட்கள்:

*வெள்ளை எள் - 1 கப்
*வெல்லம் பொடித்தது - 1 கப்
*நெய் - 1 டேபிள்ஸ்பூன்
*ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியி8ல் போட்டு பொடிக்கவும். பின்னர் அதிலேயே வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

Monday, March 14, 2011

காரடையான் நோம்பு அடை

கணவனைக் காக்கும் காரடையான் நோம்பு.  மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான வழிபாடு காரடையான் நோன்பு. தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு இது.

மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத் தில் கடைப்பிடிக்கப்படும் இந்த நோன்பு புராண காலத் தொடர்புடையது.

14.3.2011 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம். 

*************


காரடையான் நோம்பு அடை


முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.

வெல்ல அடை


தேவையானவை:

*வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
*காராமணி 1/4 கப்
*தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
*வெல்லம் (பொடித்தது) 1 கப் 
*ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
*தண்ணீர் 2 கப்

செய்முறை:

1.  காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.

2.  ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.


3.  வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.


4.  வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி 


5.  இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.



உப்பு அடை


தேவையானவை:

*வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
*காராமணி 1/4 கப்
*தேங்காய் துண்டுகள் 1/2 கப்
*தண்ணீர் 2 கப்
*பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

*கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

1.  காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.


2.  ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


3.  பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.


4.  மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்

Thursday, January 13, 2011

இனிப்பு வகைகள் - சர்க்கரைப் பொங்கல்

பொங்கல் என்பது தென்னிந்தியாவில்  உண்ணப்படும் அரிசி கொண்டு செய்யப்படும்  உணவு  வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல் என இரு வகைப்படும். வெண் பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது. உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால்,பொங்கல் என்பதைஆகு பெயராகவும் கருதலாம்.

சர்க்கரைப் பொங்கல் 

சர்க்கரைப் பொங்கல் செய்முறை இதோ உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:

*பச்சரிசி- 1/2 கிலோ
*பாசிப்பருப்பு – 200 கிராம்
*வெல்லம் – 1 கிலோ
*பால் – 1/2 லிட்டர்
*நெய் – 100 கிராம்
*முந்திரி – 100
*சுக்கு – சிறிது         
*ஏலக்காய் – 10
*தேங்காய் – 1

முதலில் செய்துக்கொள்வது:

1.  அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
2.  பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
3.  ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
4.  முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
5.  தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.

செய்யும் முறை:

1.  ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
2.  பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
3.  அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
4.  நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
5.  அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
6.  அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். சுவையான சக்கரைப் பொங்கல் தயார்

Tuesday, December 21, 2010

இனிப்பு வகைகள்

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம்.... நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது சுவைமிக்க "திருவாதிரைக் களி" தான்! 

திருவாதிரை களி நைவேத்தியம்

திருவாதிரை களி செய்வது ஏன்?

சிவ பெருமான் தம் பக்தரை சோதனை செய்ய வேண்டி, கிழ வேடம் தரித்து அவர் அளித்த களியை உண்டு களித்ததாக ஒரு கதை வழங்கப்படுகிறது. அதனால்தான் திருவாதிரைத் திருநாளில் சிவனுக்கு களி செய்து நைவேத்தியம் செய்கின்றனர். "களி' என்ற சொல்லுக்கு, ஆனந்தம் என்று தானே பொருள். சிவபெருமான் ஆடும் நடனத்தை ஆனந்த நடனம் என்பர். அவரை ஆனந்த நடராஜர் என்று வணங்குவர். உலகங்களையும், நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, "நான் ஆடிக் கொண்டு தான், அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்!' என்னும் கருத்தின் அடிப்படையில் தான் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.


திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை, ஏழு காய்கறிக் கூட்டுடன்/குழம்புடன், நைவேத்தியம் செய்து வழிபடுவர். அவ்வாறு செய்தால், ஏழு பிறவிகளிலும் இன்பமே எய்தும் என்பது இப்பண்டிகையின் உட்கருத்து.

திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் 'களி' தான் அனைவர் நினைவிற்கும் வரும்.  இந்த திருவாதிரை களியை என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஐடம்.



திருவாதிரை தினத்தை முன்னிட்டு, களி செய்முறையை இங்கே உங்களுக்காக.



தேவையான பொருட்கள்:

*பச்சரிசி - 2 கிண்ணம்
*வெல்லம் [பொடித்தது] - 21/2 கிண்ணம்
*பயிற்றம் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*கடலைப் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*நெய் - கால் கப்
*முந்திரி - 10
*திராட்சை - 15
*தேங்காய் துருவல் - அரை கப்
*ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

செய்முறை:


1.  தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

2.  வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

3.  பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

4.  ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்

5.  பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்

6.  தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்

7.  வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்

8.  மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்

9.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்

10.  வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்

11. திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும்.  பிறகு வாண்லியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, நன்றாக கிளறவும்.   உதிர்ந்தால் போல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.  சூடாகப் சாப்பிட்டால் மிகச் சுவையாக  இருக்கும்.  

12.  இதனை வெண்ணையுடனும், 7 தான் குழம்புடன் உண்ண வேண்டும். சுவையோ சுவை !



களி செய்து நடராஜ பெருமானுக்கு 
நைவேத்தியம் 
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பலகாரம் செய்து இறைவனுக்கு படைப்பார்கள். மார்கழி திருவாதிரை அன்று களி செய்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். அந்த வகையில், இந்த திருவாதிரை களி சிறப்புடையது.

Related Posts with Thumbnails