Tuesday, December 21, 2010

இனிப்பு வகைகள்

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம்.... நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது சுவைமிக்க "திருவாதிரைக் களி" தான்! 

திருவாதிரை களி நைவேத்தியம்

திருவாதிரை களி செய்வது ஏன்?

சிவ பெருமான் தம் பக்தரை சோதனை செய்ய வேண்டி, கிழ வேடம் தரித்து அவர் அளித்த களியை உண்டு களித்ததாக ஒரு கதை வழங்கப்படுகிறது. அதனால்தான் திருவாதிரைத் திருநாளில் சிவனுக்கு களி செய்து நைவேத்தியம் செய்கின்றனர். "களி' என்ற சொல்லுக்கு, ஆனந்தம் என்று தானே பொருள். சிவபெருமான் ஆடும் நடனத்தை ஆனந்த நடனம் என்பர். அவரை ஆனந்த நடராஜர் என்று வணங்குவர். உலகங்களையும், நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, "நான் ஆடிக் கொண்டு தான், அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்!' என்னும் கருத்தின் அடிப்படையில் தான் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.


திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை, ஏழு காய்கறிக் கூட்டுடன்/குழம்புடன், நைவேத்தியம் செய்து வழிபடுவர். அவ்வாறு செய்தால், ஏழு பிறவிகளிலும் இன்பமே எய்தும் என்பது இப்பண்டிகையின் உட்கருத்து.

திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் 'களி' தான் அனைவர் நினைவிற்கும் வரும்.  இந்த திருவாதிரை களியை என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஐடம்.



திருவாதிரை தினத்தை முன்னிட்டு, களி செய்முறையை இங்கே உங்களுக்காக.



தேவையான பொருட்கள்:

*பச்சரிசி - 2 கிண்ணம்
*வெல்லம் [பொடித்தது] - 21/2 கிண்ணம்
*பயிற்றம் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*கடலைப் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*நெய் - கால் கப்
*முந்திரி - 10
*திராட்சை - 15
*தேங்காய் துருவல் - அரை கப்
*ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

செய்முறை:


1.  தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

2.  வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

3.  பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

4.  ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்

5.  பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்

6.  தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்

7.  வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்

8.  மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்

9.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்

10.  வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்

11. திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும்.  பிறகு வாண்லியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, நன்றாக கிளறவும்.   உதிர்ந்தால் போல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.  சூடாகப் சாப்பிட்டால் மிகச் சுவையாக  இருக்கும்.  

12.  இதனை வெண்ணையுடனும், 7 தான் குழம்புடன் உண்ண வேண்டும். சுவையோ சுவை !



களி செய்து நடராஜ பெருமானுக்கு 
நைவேத்தியம் 
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பலகாரம் செய்து இறைவனுக்கு படைப்பார்கள். மார்கழி திருவாதிரை அன்று களி செய்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். அந்த வகையில், இந்த திருவாதிரை களி சிறப்புடையது.

Tuesday, December 14, 2010

வடை வகைகள் -பீட்ரூட் வடை

பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

*பீட்ரூட் - 2
*பெரிய வெங்காயம் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கடலைப் பருப்பு - 250 கிராம்
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை

1.  பீட்ரூடை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கவும்.

2.. ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஊற வைத்த கடலைப் பருப்பு போட்டு தண்ணீர் சேர்த்து ஒன்றிரெண்டாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

3.  .அரைத்த மாவுடன் துருவிய பீட்ரூட், நறுக்கின வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சேர்க்கவும்.

4.  மாவுடன் எல்லாவற்றையும் போட்ட பின்னர் ஒன்றாக கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். அரைக்கும் போதே மாவை சற்று கெட்டியாக அரைக்கவும்.

5.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து கையில் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் வைத்து வடையாக தட்டி எண்ணெய்யில் போடவும்..

  6.  பிறகு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எண்ணெய் அடங்கியதும் பொரித்து எடுத்து விடவும்.

7.  சூடான பீட்ரூட் வடை தயார். இந்த மாவுடன் முட்டைக்கோஸ், காரட் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

[சமைக்கும் நேரம் :30 நிமிடம்
பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

வடை வகைகள் - கோஸ் வடை

கோஸ் வடை


தேவையான பொருட்கள்


*உளுத்தம் பருப்பு-1 கப்
*பொடியாக நறுக்கிய கோஸ்-1 கப்
*இஞ்சி-1 துண்டு
*பச்சை மிளகாய்-2
*கறிவேப்பிலை-சிறிது
*உப்பு-ருசிக்கேற்ப
*எண்ணெய்-தேவையான அளவு.


செய்முறை:

1.  உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக
 பிசைந்து கொள்ளவும்..

3.  சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கவும்.
.
4.  வெ‌ங்காய‌த்‌தி‌ற்கு ப‌திலாக கோ‌ஸ் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை அருமையாக இரு‌க்கு‌ம்

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு].

வடை வகைகள் - வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை

இது ஒரு தஞ்சாவூர் ஸ்பெஸல் ஐடெம்.  என் குடும்பத்தினர் அனைவரும் இந்த வடையை மிக்க விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.


தேவையான பொருட்கள்


*வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
*பெரிய வெங்காயம் - 1
*கடலைப்பருப்பு - அரை கப்
*காய்ந்த மிளகாய் - 12
*சீரகம் - அரை டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது


செய்முறை:

1. வாழைப்பூ‌வி‌ல் வெ‌ள்ளையாக இரு‌க்கு‌ம் ஒரு நரம்பை எடுத்து‌வி‌ட்டு பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

2.  வெங்காயத்தையு‌ம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. கடலை‌ப்பருப்பை ஊறவைத்து, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், ‌சீரக‌ம், உ‌ப்பு, சே‌ர்‌த்து கொரகொர‌ப்பாக அரைத்துக்கொள்ளவும்.

4. பருப்புக் கலவை‌யி‌ல் நறு‌க்‌கிய வாழை‌ப் பூ, வெ‌ங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.

5.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

6.  ருசியான வாழைப்பூ வடை தயா‌ர்


[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

வடை வகைகள் - மசால் வடை

மசால் வடை




தேவையான பொருட்கள்



*கடலை பருப்பு - 1/4 கிலோ
*பட்டாணி பருப்பு - 1/4 கிலோ
*பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
*பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*சோம்பு - 2 ஸ்பூன்
*இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
*பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*உப்பு -தேவையான அளவு




செய்முறை

  1. கடலைப் பருப்பையும்பட்டாணி பருப்பையும் ஒரு மணி நேரம் தனித்தனியே ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும்.
  2. பின்னர் இரு பருப்பையும் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் வெங்காயம்இஞ்சி பூண்டு விழுதுகறிவேப்பிலை,கொத்தமல்லி தழைசோம்புஉப்புபெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
  4. சிறு உருண்டையாக எடுத்து தட்டையாக தட்டி வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
  5. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வடை சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்தவுடன் சூடாக பரிமாறவும்.


[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு]

Monday, December 13, 2010

வடை வகைகள் - மெது வடை

மெது வடை

மெது வடை

தேவையான பொருட்கள்

  • உளுந்து - 1/4 கிலோ
  • அரிசி மாவு - ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - நறுக்கியது
  • மிளகு - ஸ்பூன்
  • சீரகம் - ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
  • எண்ணெய் - வடைபொரிக்க தேவையானஅளவு
  • உப்பு -தேவையான அளவு

செய்முறை

1.  அரை மணி நேரம் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் தண்ணீர் சேர்க்காமல் மிகவும் நைஸாக அறைத்து கொள்ளவும். 

2.  இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

3.  ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.

4.  இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

வடை வகைகள்

கீரை வடை

கீரை வடை
தேவையான பொருட்கள்:

  • கடலைப் பருப்பு - 100 கிராம்
  • உளுந்து - 100 கிராம்
  • முளைக்கீரை - கட்டு
  • பெரிய வெங்காயம் - நறுக்கியது
  • மிளகு - ஸ்பூன்
  • சீரகம் - ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு[பொடியாக நறுக்கியத]
  • எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:




1ஒரு மணி நேரம் கடலைப் பருப்பையும் உளுந்தையும் தண்ணீரில் ஊற வைத்துபின்னர் முக்கால் பதத்துக்கு அறைத்துக் கொள்ளவும்.


2இதனுடன் நறுக்கிய கீரைவெங்காயம்கறிவேப்பிலைகொத்தமல்லி,மிளகுசீரகம்பெருங்காயம்உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டிவாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.

4
இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

Wednesday, November 24, 2010

கூட்டு வகைகள்

1.  காய்கறி தேங்காய்ப் பால் கூட்டு


தேவையானவை:

*நறுக்கின புடலங்காய் - அரை கப்
*நறுக்கின பூசணிக்காய் - அரை கப்
*நறுக்கின வெள்ளரிக்காய் - அரை கப்
*நறுக்கின பீர்க்கங்காய் - அரை கப்
*தேங்காய் - ஒன்று
*பெருங்காயம் - சிறிதளவு
*பச்சை மிளகாய் - 6
*கடுகு - அரை தேக்கரண்டி
*சீரகம் - அரை தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

1.  காய்களை கழுவி, சிறுத் துண்டங்களாக நறுக்கி மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் எடுத்துக் கொள்ளவும்.

2.  தேங்காயைத் துருவி எடுத்து, நீர்விட்டு அரைத்து கெட்டியான முதல் பால் எடுத்து தனியே வைக்கவும். மீண்டும் நீர்விட்டு அரைத்து பிழிந்து இரண்டு டம்ளர் அளவிற்கு இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

3.  இரண்டாவது எடுத்த தேங்காய் பாலுடன் நறுக்கின காய்கள், கீறிய மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.

4.  காய்கள் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய் பாலினை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

5.  வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் கொட்டி நன்றாகக் கலக்கி விடவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]


************************************


2.   கத்திரிக்காய் மிளகு கூட்டு

தேவையானவை



*கத்தரிக்காய் - கால் கிலோ
*பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*நெய் - ஒரு மேசைக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி

*மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் புரட்டி மஞ்சள் தூள் போட்டு வேக விடவும்.
பருப்பு நன்றாக வெந்து குழைந்தவுடன் கத்திரிக்காய்களை சிறிது துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து போட்டு வேகவிடவும்.

2.  காய் நன்றாக வெந்த பின், வாணலியில் நெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு சிவகக் விடவும்.

3.  பிறகு அதில் மிளகு பொடியை சேர்த்து, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து, வெந்து கொண்டிருக்கும் கூட்டில் கொட்டிக் கிளறி, இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]

***************************************************************

3.  பாகற்காய் கூட்டு

தேவையானவை:

 * பாகற்காய் - அரைக்கிலோ
 *கடலைப்பருப்பு - அரைக்கோப்பை.  பச்சைமிளகாய் - ஐந்து
 *வெங்காயம் - இரண்டு[விருப்பப்பட்டால்].
 *தக்காளி - நான்கு
 *தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
 *இஞ்சி - ஒரு துண்டு
* பூண்டு - இரண்டு பற்கள் [விருப்பப்பட்டால்]
*தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*எண்ணெய் - கால்கோப்பை
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - இரண்டு கொத்து
*உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

1.  கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைக்கவும். நெத்தாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை பிசறி அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு நன்கு கழுவி வடித்து வைக்கவும்.

2.  வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.

3.  இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப் பொரியவிடவும். தொடர்ந்து சீரகம் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.

4.  பின்பு வெங்காயத்தை கொட்டி சிவக்க வறுத்து தனியே எடுத்துவிடவும். பின்பு பாகற்காயை கொட்டி சிவக்க வறுபட்டவுடன் அதையும் ஒரு தட்டில் கொட்டவும்.

5.  தொடர்ந்து அதே சட்டியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூளைப் போட்டு அதை தொடர்ந்து பச்சைமிளகாய், மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

6.  பிறகு அதில் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு, தக்காளி பேஸ்ட், வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்புத்தூள், பருப்பு வெந்த தண்ணீர் ஒரு கோப்பை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

7.  பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் கொட்டி நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடவும்.

8.  இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்


[சமைக்கும் நேரம் : 30நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 5நபர்களுக்கு]

****************************************

4,  பீர்க்கங்காய் கூட்டு

தேவையானவை:

*பீர்க்கங்காய் -- 2
*பச்சை மிளகாய் -- 2 (நீளமாக அரிந்தது)
*சாம்பார் பொடி -- 11/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை -- சிறிது
*கடுகு -- 1 டீஸ்பூன்
*உளுந்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*சிவப்பு மிளகாய் -- 2 
*சீரகம் -- 1/4 டீஸ்பூன்

செய்முறை:

1.  முதலில் பீர்க்கங்காயை சுத்தம் செய்து அரிந்து வைத்துக் கொள்ளவும்.

2.  வாணாலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு ஒரு வதக்கு வதக்கி வெட்டி வைத்த பீர்க்கங்காயை போடவும்.

3.  இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் நன்கு வதக்கி உப்பு, சாம்பார்பொடியை போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

4.  நிறம் மாறி குழந்தது போல் ஒரு தோற்றம் வரும் அப்போது இறக்கிவிடவும்.

5.  இறக்கிய பின் ருசிக்காக தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணைய் ஊற்றி சிவப்பு மிளகாய், சீரகம் தாளித்து கொட்டவும். 

6.  பீர்க்கங்காய் கூட்டு ரெடி.  சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

************************************

5.  புடலங்காய் கூட்டு

தேவையானவை:

*புடலங்காய் - ஒன்று
*தேங்காய் துருவல் - கால் கப்
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்

செய்முறை:

1.  புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

2.  ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.

3.  வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்

4.  பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.

5.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்

6.  தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்

7.  சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி.

[சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

****************************************************************************

6.  வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

 *வாழைத்தண்டு - 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
*கடலைப் பருப்பு - 1 கப்
*மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
*உப்பு

தாளிக்க :

*கடுகு - 1/2 தேக்கரண்டி
*சீரகம் - 1/2 தேக்கரண்டி
*உளுந்து - 1/2 தேக்கரண்டி
*கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 4
*கறிவேப்பிலை - கொஞ்சம்
*எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  வாழைத்தண்டு, கடலைப் பருப்பு இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

2.  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை போட்டு எடுத்து கூட்டில் சேர்க்கவும்.

3.  இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
விரும்பினால் கடைசியாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கலாம்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

*******************************************

Tuesday, November 23, 2010

கறி / பொரியல் வகைகள்

1.  உருளை பசலை கறி

தேவையானவை:

*பசலைக்கீரை - 200 கிராம்
*உருளைக்கிழங்கு - கால் கிலோ
*இஞ்சி - சிறிய துண்டு
*பூண்டு - 6 பல்
*மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
*பச்சைமிளகாய் - 2
*கொத்தமல்லித்தழை - சிறிது
*நெய் - 2 மேசைக்கரண்டி
*உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  உருளைக்கிழங்கினைத் தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

3.  இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

4.  பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கீரைகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும்.

5.  தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை சிறிது தூவி இறக்கவும்.

  [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************

2.  ஸ்டஃப்டு வெண்டைக்காய் கறி

தேவையானவை:

*வெண்டைக்காய் - 250 கிராம்
*கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி
*துருவிய தேங்காய் - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
*பூண்டு - 2 பல்
*பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
*பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
*தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
*சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
*மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

2.  பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

3.  உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

4. வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

5.  எண்ணெய் விட்டு வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.  

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************************

3.  வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்


தேவையானவை:

*வாழைக்காய் - 4
*உளுத்தம் பருப்பு - 25 கிராம்
*மிளகாய் - 8
*நெய் - 100 கிராம்
*பெருங்காயம் - சிறிதளவு
*துருவிய தேங்காய் - 150 கிராம்
*கடலைப் பருப்பு - 50 கிராம்
*வேகவைத்த துவரம் பருப்பு - சிறிதளவு
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  வாழைக்காய்களை சுத்தமாகக் கழுவி துடைத்து விட்டு எண்ணெயைத் தடவி, நெருப்பில் காட்டி நன்றாக சுட்டு எடுத்து வைக்கவும்.

2.  வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

3. பிறகு வாழைக்காயின் தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் பிசைந்து அதில் உப்பை சேர்க்கவும்.

4.  இப்பொழுது தாளித்து அரைத்த சாமான்களை வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளவும்.

5.  இறுதியில் தேங்காய்த் துருவலையும், வேக வைத்த துவரம் பருப்பையும் வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

***********************************************

4.  சேப்பங்கிழங்கு கறி-1

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 200 கிராம்
*புளி - எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் - 4
*பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
*உப்பு - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கித் தோலை உரித்துக் கொள்ளவும்.

2.  ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுத்துக் கொண்டு அதில் புளியுடன் இரண்டு மேசைக்கரண்டி உப்புச் சேர்த்துப் போட்டு ஊறவைக்கவும்.

3.  வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.

4.  பிறகு அதில் உரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கினைப் போட்டு, புளியைக் கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

5. புளி நன்கு கொதித்து சுண்டி வரும் சமயம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்.

6. காய் நன்கு வதங்கி வறுபடவும் வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

******************************************

5.  சேப்பங்கிழங்கு ரோஸ்டு

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 4 பெரியது
*வெங்காயம் - ஒன்று [விருப்பமானால்]
*பூண்டு - 2 அல்லது 3 பல் [விருப்பமானால்]
*மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
*மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
*தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைக்கு

 தாளிக்க:
*கடுகு - கால் தேக்கரண்டி
*கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - தேவையான அள

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்

2.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.

3.  பின் நறுக்கின வெங்காயம் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்

4.  வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும்.

5.  தேவையான அளவு மிளகாய்தூள், தனியாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறவும்

6.  கடாயை மூடி அடுப்பை சிறு தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்

7.  காய் நன்கு சிவந்ததும் உப்பு, காரம் சரி பார்த்து, சுருள கிளறி இறக்கவும்

8.  சுவையான சேப்பங்கிழங்கு பொரியல் தயார். இது, சாம்பார் சாதம், கூட்டு, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

6.  பாகற்காய் ஸ்டஃப் கறி

தேவையானவை:

*பாகற்காய் - 8
*வெங்காய விழுது - ஒரு கப்
*பொட்டுக்கடலை மாவு - கால் கப்
*தயிர் - ஒரு கப்
*எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*புளிக்கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
*இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*கரம்மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
*மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  பாகற்காய் மேல் தோலினை சீவி விட்டு நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும்.

2.  பாகற்காய் மேல் மஞ்சள் தூள், உப்பு தடவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காய விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு, புளிக்கரைச்சல் இவற்றை சேர்த்து பிசறி பாகற்காயின் உள்ளே வைத்து நிரப்பவும்.

3.  ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அதில் பாகற்காய்களைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் வைத்து முழுமையாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.


[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்க
பரிமாறும் அளவு : 8 நபர்களுக்கு]

*************************************************************

7.  உருளைக்கிழங்கு கறி



உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*பெரிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
*பெரிய வெங்காயம் - 2
*நாட்டுத் தக்காளி - 2
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
*முந்திரிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
*கடுகு - அரைத் தேக்கரண்டி
*நெய் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  கால் கிலோ பெரிய உருளைக்கிழங்கினை அப்படியே முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்தபின் தோலை உரித்து பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் இவைகளைப் போட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.

3.  பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அலுமினிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைகரண்டி நல்லெண்ணெயை விட்டு காய விடவும்.

4.  காய்ந்தபின் அரை தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பிறகு ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

5.  பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

6.  தக்காளி நன்கு வதங்கி தொக்கு மாதிரி ஆனபின்பு அதில் கறிவேப்பிலையை பிய்த்துப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

7.  காயில் உப்பு, காரம் ஒட்டிக்கொண்ட பின் சிறிது நேரம் கிளறி விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் அது உருகி வாசனையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

**************************************************************

8.காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி

காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 200 கிராம்
*காலிஃபிளவர் - 200 கிராம்
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*பெரிய வெங்காயம் - ஒன்று
*மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*தக்காளி - 4
*பால் - 100 மில்லி
*கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு
*உப்பு - தேவைகேற்ப
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  காலிஃபிளவரை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2.  பாதி அளவு தக்காளியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து

4.  பின்னர் சிறிது நேரம் கழித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.

5.  பின்னர் அரைத்து வைத்த தக்காளியை அதில் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6.  உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் கொத்தமல்லியை மேலே தூவி இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   2 நபர்களுக்கு]

********************************************************************

9.  உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 250 கிராம்
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*வெங்காயம் - 100 கிராம்
*பச்சைமிளகாய் - 3
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - அரை குழிக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

2.  பிறகு எடுத்து தோல் உரித்து, உதிர்த்து விட்டு அதனுடன் உப்புத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

3.  வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறி இறக்கவும்.


[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
பரிமாறும் அளவு:  4 நபர்களுக்கு]        

*********************************************************************

10.  கீரை தயிர் கறி

தேவையானவை:

*கீரை - ஒரு கட்டு
*தயிர் - ஒரு கப்
*கிராம்பு - 3
*பூண்டு - 3
*மிளகாய்வற்றல் - 3
*கறிவேப்பிலை - 2 கொத்து
*வெந்தயம் - சிறிது
*வெங்காயம் - 2
*பச்சைமிளகாய் - 3
*இஞ்சி - சிறிது
*தக்காளி - 2
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
*கடுகு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஏதேனும் ஒரு கீரை வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கீரையை கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதில் பூண்டு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

4.  பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிவப்பு நிறம் வரும் வரை வதக்கி அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

5.  இறுதியில் கீரையை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி அதனுடன் தயிர் சேர்த்து மறுபடியும் அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின்னர் அதை எடுத்து பரிமாறவும்


 [சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு ]

******************************************************************

11.  பலாக்கொட்டைக்கறி

பலாக்கொட்டைக்கறி
தேவையானவை:

*தேங்காய்த் துருவல் - 2 கப்
*பலாக்கொட்டை - கால் கிலோ
*முருங்கைக்காய் - 2
*துவரம்பருப்பு - ஒரு கப்
*பச்சைமிளகாய் - 5
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*புளி - எலுமிச்சை அளவு
*கொத்தமல்லி விதை - ஒன்றரை மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  பலாக்கொட்டைகளை தோல் நீக்கிக் கொள்ளவும். தேவையெனில் சற்றுப் பெரியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.

2.  புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தேங்காய்த் துருவல், மல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு பலாக்கொட்டைகளை அதில் போடவும்.
அதனுடன் துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி பிறகு பாத்திரத்தை மூடி வேகவிடவும்.

5.  மூன்று நிமிடங்களுக்கு பிறகு முருங்கைக்காய் மற்றும் புளிச்சாறு ஆகியவற்றை கல்ந்து கொதிக்கவிடவும்.

6.  ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைச் சேர்த்துக் கிளறவும்.
முருங்கைக்காய் நன்றாக வேகும் வரை அடுப்பில் வைத்து அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்கவும்.

7.  வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

8. தாளித்ததை பலாக்கொட்டை மசாலாவில் கொட்டி கிளறிவிட்டுக் கொள்ளவும்.

9.  சூடாக பரிமாறவும்.



[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

****************************************************************

12.  ஸ்ட்ஃப்டு கத்தரிக்காய் கறி


பிஞ்சு கத்தரிக்காய்

தேவையானவை:

*பிஞ்சு கத்தரிக்காய் - 1/2 கிலோ,
*காய்ந்த மிளகாய் - 10,
*உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி,
*தனியா - 2 மேசைக்கரண்டி,
*பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி,
*பெருங்காயம் - சிறிது,
*புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
*உப்பு - தேவையான அளவு,
*எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

1.  கத்தரிக்காயை நான்காக பிளந்து (காம்பு பக்கம் வெட்டக் கூடாது) தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா, பொட்டுக்கடலை, பெருங்காயம் சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

3. கத்தரிக்காயை தண்ணீரை வடித்து விட்டு, பொடித்த பொடியை கத்தரிக்காய் உடையாமல் திணித்து வைக்கவும். [மீதி பொடியை தனியே வைக்கவும்.]

4.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் திணித்த கத்தரிக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 1/4 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து அவ்வப்போது தெளித்து மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் மீதி பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்


[சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

*********************************************************
13.  அவியல்

தேவையானவை:

வாழைக்காய் - 1
வெள்ளை பூசணிக்காய் - 1 துண்டு
வெள்ளரிக்காய் - 1 துண்டு
கத்திரிக்காய் - 1
கொத்தவரங்காய் - 10
முருங்கைக்காய் - 1
சேனை - 1 துண்டு
புடலங்காய் - 10 செ.மீ துண்டு
மாங்காய் - 1/2 பாகம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து

அரைக்க:

தேங்காய் துருவல் - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய் துண்டு
பச்சைமிளகாய் - 5
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

1.  எல்லா காய்களையும் 2"நீளத்தில் விரலளவு தடிமனில் நறுக்கவும். சேனையை தனியே வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து காய்களை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அரைக்க வேண்டியவற்றை கரகரப்பாக அரைக்கவும்.

3.  காய் வெந்தது தண்ணீர் பாதியாக வற்றியதும் வேகவைத்த சேனை அரைத்த கலவை போட்டு 3 நிமிடம் கிளறவும்.

4.  மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

மாங்காய் கிடைக்கவில்லையென்றால் காய் வெந்து தேங்காய் கலவை சேர்க்கும் போது தயிர் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும். மாங்காயின் புளிப்பிற்கு ஏற்ப அளவை கூட்ட குறைக்க செய்யலாம். கல்யாண வீடுகளில் வைக்கும் இந்த அவியல் தனி சுவைதான்.

 [சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
 பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு]

**********************************************************

14.  பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையானப்பொருட்கள்:

*பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*கடலைப் பருப்பு - 1/2 கப்
*காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக[(மசால் வடைக்கு அரைப்பது போல்] அரைத்து எடுக்கவும்.

3.  அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

4.  நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

6.  பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

7.  இந்த உசிலி மோர்குழம்புடன் சாப்பிடவும்.  மிகச் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

இதேபோல், வாழைப்பூ, கொத்தவரங்காய், கோஸ் வைத்தும்,  உசிலி செய்யலாம். மிக ருசியாக இருக்கும்.


[சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************
Related Posts with Thumbnails