Tuesday, December 21, 2010

இனிப்பு வகைகள்

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம்.... நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது சுவைமிக்க "திருவாதிரைக் களி" தான்! 

திருவாதிரை களி நைவேத்தியம்

திருவாதிரை களி செய்வது ஏன்?

சிவ பெருமான் தம் பக்தரை சோதனை செய்ய வேண்டி, கிழ வேடம் தரித்து அவர் அளித்த களியை உண்டு களித்ததாக ஒரு கதை வழங்கப்படுகிறது. அதனால்தான் திருவாதிரைத் திருநாளில் சிவனுக்கு களி செய்து நைவேத்தியம் செய்கின்றனர். "களி' என்ற சொல்லுக்கு, ஆனந்தம் என்று தானே பொருள். சிவபெருமான் ஆடும் நடனத்தை ஆனந்த நடனம் என்பர். அவரை ஆனந்த நடராஜர் என்று வணங்குவர். உலகங்களையும், நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, "நான் ஆடிக் கொண்டு தான், அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்!' என்னும் கருத்தின் அடிப்படையில் தான் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.


திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை, ஏழு காய்கறிக் கூட்டுடன்/குழம்புடன், நைவேத்தியம் செய்து வழிபடுவர். அவ்வாறு செய்தால், ஏழு பிறவிகளிலும் இன்பமே எய்தும் என்பது இப்பண்டிகையின் உட்கருத்து.

திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் 'களி' தான் அனைவர் நினைவிற்கும் வரும்.  இந்த திருவாதிரை களியை என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஐடம்.



திருவாதிரை தினத்தை முன்னிட்டு, களி செய்முறையை இங்கே உங்களுக்காக.



தேவையான பொருட்கள்:

*பச்சரிசி - 2 கிண்ணம்
*வெல்லம் [பொடித்தது] - 21/2 கிண்ணம்
*பயிற்றம் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*கடலைப் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*நெய் - கால் கப்
*முந்திரி - 10
*திராட்சை - 15
*தேங்காய் துருவல் - அரை கப்
*ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

செய்முறை:


1.  தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

2.  வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

3.  பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

4.  ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்

5.  பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்

6.  தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்

7.  வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்

8.  மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்

9.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்

10.  வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்

11. திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும்.  பிறகு வாண்லியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, நன்றாக கிளறவும்.   உதிர்ந்தால் போல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.  சூடாகப் சாப்பிட்டால் மிகச் சுவையாக  இருக்கும்.  

12.  இதனை வெண்ணையுடனும், 7 தான் குழம்புடன் உண்ண வேண்டும். சுவையோ சுவை !



களி செய்து நடராஜ பெருமானுக்கு 
நைவேத்தியம் 
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பலகாரம் செய்து இறைவனுக்கு படைப்பார்கள். மார்கழி திருவாதிரை அன்று களி செய்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். அந்த வகையில், இந்த திருவாதிரை களி சிறப்புடையது.

No comments:

Related Posts with Thumbnails