Tuesday, December 6, 2011

கார்த்திகை பண்டிகை இனிப்புகள்

இந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

கார்த்திகை பண்டிகை
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும். 


பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.  பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைப்பது வழக்கம்.

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.


பண்டிகை என்றால் இனிப்புகள் கைட்டாயம் இருக்கும்.... இதோ கார்த்திகை சிறப்பு சமையற்குறிப்புகள் உங்களுக்காக:

கார்த்திகை பொரி


கார்த்திகை பொரி

தேவையானப்பொருட்கள்:

அவல் பொரி - 8 கப்
வெல்லம் பொடிசெய்தது - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும். 

சுத்தம் செய்த பொரியை நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.

உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.

உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடலாம்.  கார்த்திகைப் பொரி தயார்.

இதேபோல், நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியையும் செய்யவும்.  நெல் பொரி, அவல் பொரி இரண்டும் கார்த்திகையின் பொழுது, கடைகளில் கிடைக்கும். இதனை சுத்தப்படுத்தி செய்யவும்.


2.  கார்த்திகை அப்பம்




                    கார்த்திகை அப்பம்
தேவையானப்பொருட்கள்:


அரிசிமாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:


1.  1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.


2.  வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.


3.  அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.


4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.


குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.


மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம். 


சுவைமிக்க கார்த்திகை அப்பம் தயார்.


கார்த்திகை நல்வாழ்த்துக்கள்!
Related Posts with Thumbnails