Friday, April 23, 2010

சாம்பார் வகைகள்/குழம்பு வகைகள்

தமிழகத்தின் சாம்பார் தனிருசிதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு, புளிக்கரைசல், காய்கறிகள் என்றாலும், தயாரிக்கப்படும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது.
சிற்றுண்டி வகைகளுக்காக, பெரும்பாலும் இட்லிக்காக தயாரிக்கப்படும் இட்லி சாம்பாரின் ருசி அலாதியானது. துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பயற்றம்பருப்பு என அனைத்து வகை பருப்புகளைப் பயன்படுத்தியும் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் மிகவும் சிறப்பானது.


 பாசிப்பயறு சாம்பார்[Moong Dal Sambar]

தேவையான பொருட்கள்:

*பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 1/2 கப்
*பச்சைமிளகாய் - 3
*தக்காளி - 2
*கெட்டியான புளிக்கரைச்சல் - 2 டேபிள் ஸ்பூன்
*மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

1. பருப்பை குக்கரில் போட்டு ஒரு விசில் சத்தம் வரைக்கும் வேக வக்கவும்.
2. தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சிறுய வெங்காயத்தை உரிக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
3. பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி இவற்றை எண்ணெயில் வதக்கவும்.
4. வேகவைத்த பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, புளிக்கரைச்சல் சேர்க்கவும். போதுமான தண்ணீர் விடவும்.
5. கெட்டியாக கொதிக்க வைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு இவற்றை தாளிக்கவும்.
6. சாம்பாரில் ஊற்றி கறிவேப்பிலை போட்டு அலங்கரிக்கவும்.

 
 தக்காளி சாம்பார்[Tomato Sambar]

தேவையான பொருட்கள்:

*வேகவைத்த துவரம்பருப்பு - 1/2கப்
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப
*கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தக்காளி - 2 அரிந்து கொள்ளவும்

எண்ணெயில் வதக்கி:அரைக்கவும்:

*சீரகம் - 1 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 7
*பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
*தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
[அரைக்கும் போது தேங்காய் சேர்க்கவும்]

செய்முறை:

1. பருப்பை நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் விட்டு, மற்ற பொருட்களையும் அரைத்த விழுதையும் சேர்த்து சேர்க்கவும்.
3. பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
4. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கடிக்கவும்.

**************************************

  கத்திரிக்காய் அரைத்துவிட்ட சாமபார்


கத்திரிக்காய் அரைத்துவிட்ட சாமபார்


தேவையானப்பொருட்கள்:

*துவரம் பருப்பு - 1/2 கப்
*கத்திரிக்காய் -  சிறிதளவு
*சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை[விருப்பப்பட்டால்]
*தக்காளி - 1
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

*காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 வரை
*தனியா - 1 டேபிள்ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
*மிளகு - 1/4 டீஸ்பூன்
*சீரகம் - 1/4 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

2. கத்திரிக்காய் அல்லது விருப்பமான காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து விட்டு நீள வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. புளியை ஊற வைத்து, கரைத்துப் பிழிந்துக் கொள்ளவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

4. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைப் போட்டு சற்று சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்தப்பின் மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும், அரைத்த விழுதில் சேர்த்துக் கொள்ளவும்.

5. வாணலி அல்லது அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் 1 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. தக்காளி நன்றாக வதங்கியவுடன் அத்துடன் கத்திரிக்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள வேறு காயைப் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

7. காய் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது, வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

8. பின்னர் அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

9.  சுவைமிக்க அரைத்துவிட்ட சாம்பார் தயார்.

**************************************
  இரு புளிக்குழம்பு

இரண்டு வகை புளிப்பு [புளி, மற்றும் தயிர்] சேர்த்து செய்யப்படுவதால், இதை இரு புளிக்குழம்பு என்று அழைப்பார்கள். வத்தக்குழம்பு, மோர்குழம்பு இரண்டும் கலந்த சுவையில் இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

*புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
*தயிர் - 1 கப்
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
*வெண்டைக்காய் - 4 அல்லது 5

வறுத்தரைக்க:

*காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
*உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
*வெந்தயம் - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

3.  வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். [கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்]. அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

5.  கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு:

இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்.


*****************************************
  கீரை சாம்பார்

தேவையானப்பொருட்கள்:




*கீரை [எந்த வகை கீரையானாலும்] பொடியாக நறுக்கியது - 1 கப்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*புளி - எலுமிச்சம் பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிப்பதற்கு:


*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டியது)
*தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)


செய்முறை:


1.  துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.


2.  புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.


3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். மேலும் சில வினாடிகள் கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக்கிளறிவிட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும். 
4.  சுவைமிக்க கீரை சாம்பார் தயார்.

*******************************************
  பருப்பு உருண்டைக் குழம்பு
 
இந்த குழம்பு ஒரு "தஞ்சாவூர் ஸ்பெஷல்" item!!. எங்கள் வீட்டில் அனைவரும் இதனை மிக்க விரும்பி சாப்பிடக்கூடிய ஒர் "dish" இது.

தேவையானப் பொருட்கள்:

*துவரம் பருப்பு - 1/2 கப்
*பச்சை அரிசி - 1 டீஸ்பூன்
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் வெங்காயம் - 3
*பெரிய வெங்காயம் - பாதி
*தேங்காய் துருவல் - 1/4 கப்
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*கறிவெப்பிலை - ஒரு கொத்து
*உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.  உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

3.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும். குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன், ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.

4.  கடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.
5. சுவையான  பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.

*******************************************

  வாழைக்காய் பால் குழம்பு

உடம்புக்கு நல்லது, மற்றும் மாதம் ஒரு முறை இந்த ருசியான குழம்பை சமைத்து சாப்பிடலாம்.

தேவையானப்பொருட்கள்:

*வாழைக்காய் - 1
*தேங்காய் - 1
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
*உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.

2.  கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.

3.  வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.

4.  வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

5.  ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.

6.  காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

7.  தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

8.  சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

**********************************************

 புளிச்சாறு

புளிச்சாறு அனைவரும் சுவைத்து, விரும்பி சாப்பிடக்கூடிய item  ஒன்றாகும்.

தேவையானப்பொருட்கள்:


*புளி - எலுமிச்சம் பழ அளவு
*பெரிய வெங்காயம் - 1
*காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றைப் பிழிந்தெடுக்கவும். தேவையான நீரைச் சேர்த்து, 3 கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2.  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், தீயைத் தணித்துக் கொண்டு வெந்தயத்தைச் சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். காய்நத மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து மிதமான தீயில் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

4.  சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள அப்பளம் பொருத்தமாயிருக்கும். பார்ப்பதற்கு ரசம் போலும், சுவையில் புளிக்காய்ச்சல் போலவும் இருக்கும்.

5.  காய்கறிகள் கையிருப்பில் இல்லாத பொழுது, அவசரத்திற்கு இந்தச் சாறு கை கொடுக்கும்.

6.  சுவைமிக்க புளி சாறு தயார்.

*********************************************

  பொரிச்ச குழம்பு

தேவையானப்பொருட்கள்:

*காய்கறி நறுக்கியது - 2 கப் [வெள்ளைக்கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், குடமிளகாய் அல்லது விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம்]
*பயத்தம் பருப்பு - 1/2 கப்
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைத்தெடுக்க:

*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 1
அரிசி மாவு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 2 [பொடியாக நறுக்கிக் கொள்ளவும்]
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடவேண்டாம்.

2.  காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.

3.  தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை அரைத்தெடுத்து, அத்துடன் அரைத்த மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

4.  சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம் அல்லது வடவம் நன்றாக இருக்கும்.

****************************************

  அகத்திக் கீரை சாறு

அகத்திக் கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சமயலில் சேர்த்துக் கொண்டால், உடம்பு ஆரோகியமாக இருக்கும்

தேவையானப்பொருட்கள்:

*அகத்திக்கீரை - 1 கட்டு
*பெரிய வெங்காயம் - 1
*பச்சை மிளகாய் - 2
*சீரகம் - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.  கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.

2.  வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.

4.  தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

5.  சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. இந்தச் சாற்றை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.

********************************************

 மிளகு குழம்பு

தேவையானப்பொருட்கள்:

*மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
*முழுப்பூண்டு - 1
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*நல்லெண்ணை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*சாம்பார் வெங்காயம் - 5 அல்லது 6
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  புளியை ஊறவைத்து, கரைத்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

2.  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து, பூண்டுப்பற்களை தனியாக எடுத்து வைக்கவும். பத்து முதல் பதினைந்து பூண்டுப்பற்கள் போதுமானது.

3.  ஒரு வாணலியில், ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, முதலில் மிளகையும், பின்னர் சீரகத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, பூண்டைப் போட்டு, நன்றாக சிவக்கும் வரை வதக்கி எடுத்து, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4.  அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மீதி எண்ணையை விடவும். அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைப் போட்டு சிறிது வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைப் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். மிண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்துப் பின்னர் இறக்கி வைக்கவும்.

5.  குறிப்பு: மிளகிற்கு, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அதனால், குளிர் அல்லது மழைக்காலங்களின் பொழுது, இந்தக் குழம்பைச் செய்து, சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்குப் பக்கத் துணை.

6.  இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும். தயிர் சாதத்திற்கும் மிக சுவையாக இருக்கும்.

*****************************************

  வத்தக் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*வத்தல் - (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) - 1 டேபிள்ஸ்பூன்
*பூண்டுப் பல் - 10 [ விருப்பப்பட்டால்]
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் [குவித்து அளக்கவும்]
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
*நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்படி எடுத்த சாறு, மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

2.  ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயத்தைச் சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், வெந்தயம் காந்தி கறுப்பாகிக் கசக்கும்). வெந்தயம் இலேசாக சிவந்தவுடன், வத்தலையும், பூண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு சிறிது வதக்கி, அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். ஒரு மூடி போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் நன்றாகக் கொதித்து, எண்ணை மேலே தெரியும் வரை வைத்திருந்து, பின்னர் கீழே இறக்கி வைக்கவும்.

3.  குறிப்பு: மேற்கண்ட முறையில் வைக்கப்படும் குழம்பு, சற்று சிவப்பாக இருக்கும். கருஞ்சிவப்பாக குழம்பு தேவையென்றால், புளித்தண்ணீரை ஊற்றும் முன்னர், பூண்டு, வத்தல் ஆகியவற்றை வதக்கிய பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கி, அதன் பின் புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விட்டால், குழம்பு கருஞ்சிவப்பாக இருக்கும்.

4.  இதில் "கருவடாம்" என்னும் தாளிக்கும் வடகத்தை கடுகுடன் சேர்த்து தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

5.  தயிர் சாதத்திற்கும் மிக சுவையாக இருக்கும்.

**********************************************

 மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார்

இந்த சாம்பார் எங்கள் வீட்டின் அனைவருக்கும் பிடித்தமான ஓர் "டிஸ்" . என்னுடைய அம்மாவின் "தஞ்சாவூர் ஸ்பெஸல்" item...!!

மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தமான ஒன்று.  கோடைகாலத்தில், இந்த மூன்று காய்களும் தாராளமாக கிடைப்பதால், அனேகமாக எல்லோர் வீட்டிலும் வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் கண்டிப்பாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

*மாங்காய் - 1 (நடுத்தர அளவு)
*முருங்கைக்காய் - 1
*பலாக்கொட்டை - 5 முதல் 6 வரை
*தக்காளி - 1
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது
*சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 [நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்]
*பச்சை மிளகாய் - 2 [நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்]

செய்முறை:

1.  துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப்போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

2.  புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

3.  தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

4.  பலாகொட்டையை குறுக்கே இரண்டாக வெட்டி, அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

5.  முருங்கைக்காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மாங்காயை கொட்டையுடன் நான்கு அல்லது 5 துண்டுகளாக விட்டிக் கொள்ளவும்.

6.  ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை, தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும். பின்னை அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். மாங்காய் சீக்கிரம் வெந்துவிடுமாகையால், முருங்கைக்காய் சற்று வெந்ததும்தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும். மாங்காயை முதலிலேயே சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும்.

7.  காய்கள் வெந்தவுடன், புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.

8.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, இறக்கி வைக்கவும்.

9.  மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தயார்.

*********************************************


 இட்லி சாம்பார்

இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும்.

தேவையானப்பொருட்கள்:

*துவரம்பருப்பு - 1/2 கப்
*பயத்தம்பருப்பு - 1/4 கப்
*புளி - நெல்லிக்காயளவு
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
*தக்காளி - 1
*பச்சைமிளகாய் - 2
*கறிவேப்பிலை - சிறிது
*கொத்துமல்லித்தழை - சிறிது
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

2.  புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.  சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும்.

5.  குறிப்பு: எண்ணையில் வறுத்து அரைத்த சாம்பார் பொடியை உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.

6.  இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம்.

*******************************************


  கறிவேப்பிலை குழம்பு

நல்ல காரசாரமான இந்தக்குழம்பு குளிர் காலத்துக்கு ஏற்றது.

தேவையானப்பொருட்கள்:

*கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
*துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 5
*மிளகு - 2 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*புளி - எலுமிச்சம் பழ அளவு
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

3.  தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

5.  விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.

*****************************************


  சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு

தேவையானப்பொருட்கள்:


*சுண்டைக்காய் - 2 கப்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 2
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*வெங்காயம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  துவரம்பருப்பை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியபின், அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

4.  சுண்டைக்காயைத் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும்.

5.  காய் வெந்த பிறகு, வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வரும்வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கி விட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.

6.  கடைசியில், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

 குறிப்பு: துவரம் பருப்பிற்குப் பதில், பயத்தம்பருப்பையும் இதில் சேர்த்து செய்யலாம்.  சுவையாக இருக்கும்.

*****************************************

 வெங்காய சாம்பார்[Onion Sambar]



வெங்காய சாம்பார்


தேவையான பொருட்கள்:


*சாம்பார் வெங்காயம் - 15 அல்லது 20
*தக்காளி நடுத்தர அளவு - 1
*பச்சை மிளகாய் - 2
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*க‌டுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காய‌த்தூள் -‍ ஒரு சிட்டிகை
*க‌றிவேப்பிலை - சிறிது
*கொத்த‌ம‌ல்லித்த‌ழை - சிறிது

செய்முறை:

1.  துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.

2.  புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும்.

3.  வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும்.

4.  ஒரு வாண‌லியில் எண்ணை விட்டு (ந‌ல்லெண்ணை உப‌யோகித்தால், வாச‌னையாக‌ இருக்கும்) சூடான‌தும் க‌டுகு போட‌வும். க‌டுகு வெடித்த‌வுட‌ன், பெருங்காய‌த்தூள், வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், க‌றிவேப்பிலைச் சேர்த்து வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் ச‌ற்று வ‌த‌ங்கிய‌வுட‌ன், த‌க்காளித்துண்டுக‌ளைச் சேர்த்து ஒரு நிமிடம் வ‌த‌க்க‌வும். பின்ன‌ர் அதில், புளித்த‌ண்ணீர், சாம்பார் பொடி, ம‌ஞ்ச‌ள்த்தூள், உப்புச் சேர்த்து, மூடி வைத்து, மித‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.

5.  குழ‌ம்பு கொதிக்க‌ ஆர‌ம்பித்த‌தும், வெந்த‌ப் ப‌ருப்பை ம‌சித்து சேர்க்க‌வும். ந‌ன்றாக‌க் கிள‌றி மீண்டும் கொதிக்க‌ விட‌வும். சாம்பார் கொதித்து, ச‌ற்று கெட்டியான‌தும், கீழே இற‌க்கி, கொத்தும‌ல்லித் த‌ழையைத் தூவ‌வும்.

6.  சுவைமிக்க வெங்காய சாம்பார் தயார்.


*******************************************
 
  மோர்க்குழம்பு
 
தேவையானப் பொருட்கள்:

*மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 2
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*அரிசி - 1/2 டீஸ்பூன்
*துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 1
*பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
*உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

1.  துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2.  பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

3.  மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும்.

குறிப்பு:

தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால் நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.

*****************************************

  முருங்கைக்காய் பொரிச்சக் குழம்பு

தேவையானப் பொருட்கள்:

*முருங்கைக்காய் - 2
*பயத்தம்பருப்பு - 1/2 கப்
*தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*அரிசி - 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 1
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

1.  முருங்கைக்காயை மூன்று அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.  பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவைத்துக் கொள்ளவும். குழைய விட வேண்டாம்.

3.  ஒரு பாத்திரத்தில், முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். அதில், சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

4.  தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

5.  காய் வெந்தவுடன், வேக வைத்த பயத்தம் பருப்பை லேசாக மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சிறிது தண்ணீருடன் கலக்கி குழம்பில் ஊற்றவும். நன்றாகக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

6. குழம்பு நன்றாகக் கொதித்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை தாளித்துக் கொட்டவும்.
Related Posts with Thumbnails