Wednesday, November 24, 2010

கூட்டு வகைகள்

1.  காய்கறி தேங்காய்ப் பால் கூட்டு


தேவையானவை:

*நறுக்கின புடலங்காய் - அரை கப்
*நறுக்கின பூசணிக்காய் - அரை கப்
*நறுக்கின வெள்ளரிக்காய் - அரை கப்
*நறுக்கின பீர்க்கங்காய் - அரை கப்
*தேங்காய் - ஒன்று
*பெருங்காயம் - சிறிதளவு
*பச்சை மிளகாய் - 6
*கடுகு - அரை தேக்கரண்டி
*சீரகம் - அரை தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

1.  காய்களை கழுவி, சிறுத் துண்டங்களாக நறுக்கி மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் எடுத்துக் கொள்ளவும்.

2.  தேங்காயைத் துருவி எடுத்து, நீர்விட்டு அரைத்து கெட்டியான முதல் பால் எடுத்து தனியே வைக்கவும். மீண்டும் நீர்விட்டு அரைத்து பிழிந்து இரண்டு டம்ளர் அளவிற்கு இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

3.  இரண்டாவது எடுத்த தேங்காய் பாலுடன் நறுக்கின காய்கள், கீறிய மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.

4.  காய்கள் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய் பாலினை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

5.  வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் கொட்டி நன்றாகக் கலக்கி விடவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]


************************************


2.   கத்திரிக்காய் மிளகு கூட்டு

தேவையானவை



*கத்தரிக்காய் - கால் கிலோ
*பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*நெய் - ஒரு மேசைக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி

*மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் புரட்டி மஞ்சள் தூள் போட்டு வேக விடவும்.
பருப்பு நன்றாக வெந்து குழைந்தவுடன் கத்திரிக்காய்களை சிறிது துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து போட்டு வேகவிடவும்.

2.  காய் நன்றாக வெந்த பின், வாணலியில் நெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு சிவகக் விடவும்.

3.  பிறகு அதில் மிளகு பொடியை சேர்த்து, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து, வெந்து கொண்டிருக்கும் கூட்டில் கொட்டிக் கிளறி, இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]

***************************************************************

3.  பாகற்காய் கூட்டு

தேவையானவை:

 * பாகற்காய் - அரைக்கிலோ
 *கடலைப்பருப்பு - அரைக்கோப்பை.  பச்சைமிளகாய் - ஐந்து
 *வெங்காயம் - இரண்டு[விருப்பப்பட்டால்].
 *தக்காளி - நான்கு
 *தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
 *இஞ்சி - ஒரு துண்டு
* பூண்டு - இரண்டு பற்கள் [விருப்பப்பட்டால்]
*தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*எண்ணெய் - கால்கோப்பை
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - இரண்டு கொத்து
*உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

1.  கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைக்கவும். நெத்தாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை பிசறி அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு நன்கு கழுவி வடித்து வைக்கவும்.

2.  வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.

3.  இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப் பொரியவிடவும். தொடர்ந்து சீரகம் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.

4.  பின்பு வெங்காயத்தை கொட்டி சிவக்க வறுத்து தனியே எடுத்துவிடவும். பின்பு பாகற்காயை கொட்டி சிவக்க வறுபட்டவுடன் அதையும் ஒரு தட்டில் கொட்டவும்.

5.  தொடர்ந்து அதே சட்டியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூளைப் போட்டு அதை தொடர்ந்து பச்சைமிளகாய், மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

6.  பிறகு அதில் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு, தக்காளி பேஸ்ட், வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்புத்தூள், பருப்பு வெந்த தண்ணீர் ஒரு கோப்பை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

7.  பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் கொட்டி நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடவும்.

8.  இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்


[சமைக்கும் நேரம் : 30நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 5நபர்களுக்கு]

****************************************

4,  பீர்க்கங்காய் கூட்டு

தேவையானவை:

*பீர்க்கங்காய் -- 2
*பச்சை மிளகாய் -- 2 (நீளமாக அரிந்தது)
*சாம்பார் பொடி -- 11/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை -- சிறிது
*கடுகு -- 1 டீஸ்பூன்
*உளுந்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*சிவப்பு மிளகாய் -- 2 
*சீரகம் -- 1/4 டீஸ்பூன்

செய்முறை:

1.  முதலில் பீர்க்கங்காயை சுத்தம் செய்து அரிந்து வைத்துக் கொள்ளவும்.

2.  வாணாலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு ஒரு வதக்கு வதக்கி வெட்டி வைத்த பீர்க்கங்காயை போடவும்.

3.  இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் நன்கு வதக்கி உப்பு, சாம்பார்பொடியை போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

4.  நிறம் மாறி குழந்தது போல் ஒரு தோற்றம் வரும் அப்போது இறக்கிவிடவும்.

5.  இறக்கிய பின் ருசிக்காக தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணைய் ஊற்றி சிவப்பு மிளகாய், சீரகம் தாளித்து கொட்டவும். 

6.  பீர்க்கங்காய் கூட்டு ரெடி.  சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

************************************

5.  புடலங்காய் கூட்டு

தேவையானவை:

*புடலங்காய் - ஒன்று
*தேங்காய் துருவல் - கால் கப்
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்

செய்முறை:

1.  புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

2.  ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.

3.  வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்

4.  பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.

5.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்

6.  தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்

7.  சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி.

[சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

****************************************************************************

6.  வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

 *வாழைத்தண்டு - 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
*கடலைப் பருப்பு - 1 கப்
*மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
*உப்பு

தாளிக்க :

*கடுகு - 1/2 தேக்கரண்டி
*சீரகம் - 1/2 தேக்கரண்டி
*உளுந்து - 1/2 தேக்கரண்டி
*கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 4
*கறிவேப்பிலை - கொஞ்சம்
*எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  வாழைத்தண்டு, கடலைப் பருப்பு இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

2.  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை போட்டு எடுத்து கூட்டில் சேர்க்கவும்.

3.  இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
விரும்பினால் கடைசியாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கலாம்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

*******************************************

1 comment:

premsagar,chennai said...

கத்திரிக்காய் மிளகு கூட்டினை செய்து பார்த்த போது மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றி

Related Posts with Thumbnails